Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

அத்தியாயம் 38 - பரிசுத்தவானின் வெகுமதி

திரளான தேவதூதர்கள், பரிசுத்த நகரத்திலிருந்து, அநேக கிரீடங்களை கொண்டுவந்ததை நான் கண்டேன். ஒவ்வொரு நீதிமானுக்கும், பெயர் பொறிக்கப்பட்ட கிரீடங்கள் அவை. அக்கிரீடங்கள் அனைத்தும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இயேசு, அவருடைய வலதுகரத்தினை கொண்டு அக்கிரீடங்களை பரிசுத்தவான்களின் தலைகளில் அணிவித்தார். இதேவன்னமாக, தேவதூதர்கள் சுரமண்டலங்களை எடுத்து வந்தார்கள். அவைகளையும் இயேசு, தமது பிள்ளைகளிடம் எடுத்துக் கொடுத்தார். அதிகார தூதன் முதல் கருவியை இசைக்க, அனைவரும் சேர்ந்து இனிமையான இசையினால் பரலோகத்தை நிரப்பினார்கள். பின்பு, மீட்கப்பட்ட கூட்டத்தினரை பரமநகரத்தின் வாசலுக்கு அழைத்துச்சென்றார். அவர் வாசலைத் திறந்து, சத்தியத்தை காத்துக்கொண்ட ஜனங்களை உட்பிரவேசிக்கும்படியாக உத்தரவிட்டார். அந்த பட்டணமே கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஐசுவரியத்தின் மகிமையை அனைத்து இடங்களிலும் காணமுடிந்தது. மீட்கப்பட்ட பரிசுத்தவான்களை இயேசு திரும்பி பார்த்தபொழுது, அவர்களுடைய முகங்கள் மகிமையால் பிரகாசித்தன. இயேசு அவர்களை நோக்கி, “என் ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு, திருப்தியானேன். இந்த மகிமையை உங்களுக்களிக்கிறேன். உங்கள் கவலைகள் எல்லாம் தீர்ந்தது. இனி மரணமில்லை, கவலையில்லை, கண்ணீரில்லை, வேதனையுமில்லை” என்றார். மீட்கப்பட்ட கூட்டத்தினர் அவரை பணிந்து, தங்கள் கிரீடங்களை அவருடைய பாதத்தில் வைத்தனர். இயேசுவின் அன்பான கரம் அவர்களை எழுப்பிற்று. பரிசுத்தவான்கள் தங்கள் சுரமண்டலங்களை மீட்டி ஆட்டுக்குட்டியானவரின் பாடலினால் பரலோகத்தை நிரப்பினார்கள். GCt 106.1

பின்பு, இயேசு அவர்களை நகரத்தின் மத்தியிலிருந்த ஜீவ விருட்சத்தின் அருகே அழைத்து வந்து, செவிகள் இதுவரை கேட்டிராத இனிய குரலில், “இந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இவை அனைத்தையும் புசியுங்கள்” என்று கூறினார். இவ்விருட்சத்தின் கனியை இலவசமாக புசிக்கும் வாய்ப்பினை பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டார்கள். பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணிருள்ள சுத்தமான நதி தேவனின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்தது. இந்நதியின் இருகரையிலும் கனிகளைத்தரும் ஜீவவிருட்சங்கள் நின்றன. பரலோகத்தை விவரிப்பதற்கு அனைத்து மொழிகளுமே பலவீனமானவைகள் தான். இக்காட்சி என் முன்பாக எழுந்தபோது, நான் பிரமிப்பில் தொலைந்து போனேன். எனது பேனாவை கீழே வைத்துவிட்டு, “என்ன அன்பு! ஆச்சரியமான அன்பு” என்று நான் கத்தினேன். உன்னதமான மொழிகளினால் கூட, பரலோகத்தின் மகிமையையோ, இரட்சகரின் மேன்மையான அன்பின் ஆழங்களையோ விவரிக்க இயலாது என நான் கண்டேன். GCt 106.2

பார்கக : ஏசாயா 53 : 11
வெளிப்படுத்தல் 21 : 4 ; 22 : 1-2